முழுமையான பெண் விடுதலைக்கு என்ன வழி? என்ற கேள்வியை மையமாக்கி, பெண்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கத்தை, சென்னை கோடம்பாக்கம் பிரதாப் பிளாசா ஓட்டலில் 24-ஆம் தேதி மாலையில் ஏற்பாடு செய்திருந்தார் கவிஞர் நர்மதா. இவர் சிறந்த பெண்ணியப் படைப்பாளர் ஆவார். ஏறத்தாழ 10 நூல்களுக்கும் மேல் எழுதியவர். கல்வியாளரும் ஆவார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணியவாதிகளையும், பெண் படைப்பாளர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார் நர்மதா. அதில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட பெண் பிரபலங்கள் கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், பெங்களூர், மதுரை என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்துகொண்டார்கள். பலரும் தங்கள் புரட்சி எண்ணங்களை விடுதலைக் குரலில் இங்கே முழங்கினர். இந்த எழுச்சிமிகும் நிகழ்ச்சிக்கு முதுபெரும் தமிழறிஞரும் பெண்ணியருமான முனைவர் நா. நளினிதேவி முன்னிலை வகித்தார்.

இதில் பேசிய பெரும்பாலான பெண்ணியப் படைப்பாளர்கள், நாங்கள் ஆண்களுக்கு அடிமை இல்லை. எல்லா வகையிலும் ஆண்களுக்குச் சமமான தகுதியும் திறமையும் உரிமையும் கொண்ட சக மனுஷிகளே’என்ற குரலையே எதிரொலித்தனர்.

தங்கள் ஆற்றாமைகள், பாடுகள், அடக்கப்படும் அபிலாஷைகள் என்று அவர்கள் பேசியபோதும், குடும்பம் என்ற அமைப்பு அவர்களுக்குத் தருகின்ற அன்பையும் ஆதரவையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

Advertisment

அறிவித்தபடியே, கலந்துரையாடல் மிகச் சரியாக மாலை 4.00 மணிக்கே தொடங்கிவிட்டது. இந்தக் காலந்தவறாமை, பெண்களுக்கான காலம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதுபோல் இருந்தது.

கவிஞர் நர்மதா, வந்தவர்களை எல்லாம் மகிழ்வுடன் வரவேற்று, கலந்துரையாடலுக்கு அழைத்தார்.

அப்போது அவர் தோன்றிய காலம்தொட்டு/ நாகரிகம் சீராக வளர்ந்திருந்தால் / மொழி இன்று வெகுவாகச் சுருங்கியிருக்கும்/ பெரும்பாலும் மௌனங்களாய்../ புன்னகையாய்!' -என்று நான் எழுதியிருக்கிறேன். ஆனால்.. இன்றைய நமது இந்தக் கூடுகை நாளில், மொழி என்பது அன்பின் பெருவெள்ளமாக, பாசப் பெருவெளியாக, அடக்கிவைத்த ஆதங்கங்களைக் கொட்டித் தீர்க்கும் வடிகாலாக, இதயம் தொடுவதாக, உருவாகி வெளியானதைக் கண் எதிரில் கண்டேன். மொழியின் வித்தியாசமான ஓர் அழகிய பரிமாணம் இது!

Advertisment

womens

வந்திருக்கும் அத்துணை பேரும், வெளியூர் களிலிருந்து வந்த சகோதரிகள் உட்பட அனைவரும் தம் பயணக் களைப்பையும் மறந்து, மகிழ்ச்சியில் திளைக்கிற இனிய தருணமும் இது. இங்கே ஒருவரை யொருவர் பாசத்துடன் அணைத்துக்கொண்டார்கள், பாராட்டினார்கள், கண்கள் விரிய வியப்பை வெளிப் படுத்தினார்கள்.

ஆனால் ஒரேயொரு கூட்டத்தில் கொட்டித் தீர்த்துவிடக் கூடியன அல்ல; பெண்களின் வலிகள்! ஓர் ஐம்பதுபேருக்குள் மட்டும் பகிர்ந்து விட்டுவிட முடிகிற எளிய அனுபவங்களும் அல்ல அவை. பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள வேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன. நிறைய. ஆண்- பெண் இருபாலரிடமும். இது இன்னும் விரிவுபடுத்தப்படும். விரைவுபடுத்தப்படும். அதற்கானவற்றை இனி முனைந்து முன்னெடுக்கவேண்டும்! கையிணைக்கக் காத்திருக் கிறார்கள் ஆண்களிலும் பலர்.

அடுத்த முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்!'' என்றார்.

முதலில் பேசியவர் கவிதாயினி கவிக்குழல். இவர் அண்மையில் "தென்றல்' எனும் பெண்ணியக் காதல் குறுங்காவியத்தைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இராணுவ சேவையில் பெண்களின் பங்களிப்பு அதிகம் தேவை என்ற வாதத்தையே முன்வைத்தார். ""1888-லேயே இராணுவத் துறையில் பெண்கள் நுழைந்து விட்டார்கள். அப்படி இருந்தும் இப்போது பெண்களின் பங்களிப்பு இராணுவத்தில் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இராணுவம் என்றால் துப்பாக்கி ஏந்துதல் என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி., அங்கே மருத்துவம், கணிணி என பல்வேறு உட்துறைகள் உள்ளன. இவற்றையும் நாம் ஆளுமை செய்யவேண்டும். வீரமும் ஆயுதமும் புழங்கும் துறையில் பெண்களான நாம் அதிகம் புழங்கவேண்டும்''’என்றார் வெகு உற்சாகமாக.

கருத்தரங்கத்தில் பேசிய வழக்கறிஞர் சுசீலா குடும்ப அமைப்பு உருவானவிதம் பற்றி மிக நீண்டதொரு உரையை ஆற்றினார். பெண் எப்படி எந்தவகையில் இரண்டாம்பட்சமானவளாக மாற்றப்பட்டாள் என்பது பற்றியும் விளக்கினார்.

அடுத்துப் பேசிய லதா, நம் சமூகத்தில் காதல் பற்றி இருக்கின்ற அதீத புனிதக் கற்பனை பற்றிய அபத்தம். செக்ஸ் பற்றிய சரியான புரிதலை சரியான வயதில் உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் பேசவந்த கவிஞர் மனுஷியோ, ""பெண்களுக்கு மட்டும்தான் நீதி இலக்கியங்கள் பேசுகின்றன. இப்படி இப்படி இரு என்று கட்டளை இடுகின்றன. ஆண்களுக்கு அவை பேசுவதில்லை. சில பெண் பிம்பங்கள் மூலமாகவும் நமக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீதை போல இருக்கும்படி சொல்பவர்கள், மாதவி போல் வாழு என்று சொல்வதில்லை. உண்மையில் மாதவிதான் ஆளுமை மிக்க பாத்திரம். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பெண்கள் பேசக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கிருப்பவர்கள், ஒன்று பெண்னை புனிதமாக்குகிறார்கள். இல்லை என்றால் அவளைத் தூக்கி எறிகிறார்கள். இப்படி இரு போக்கு இங்கே இருக்கிறது. உடல்மொழியையே பேசக்கூடாது என்று கூறுகிறார்கள்.

womens

பெண்கள் தங்கள் உலகத்தை, தங்கள் எழுத்தை, தங்கள் கவிதையை இப்படிதான் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பெண் எழுதுவதைத் தீர்மானிக்கிற இடத்தில் ஆண்களே இருக்கிறார்கள்.

இனி பெண் எழுத்தை பெண்கள்தான் முடிவு செய்யவேண்டும். குடும்பத்திற்குள் பெண் களுக்கு என்று தனிக்கருத்து அனுமதிக்கப் படுவதில்லை. இதை மாற்றவேண்டும். பெண் என்பதை நமக்கான அடையாளமாக முன்வைப்போம். அதற்கான சலுகை நமக்குத் தேவையில்லை. பெண்களிடமிருந்தே பெண்களுக்கு எதிரான கேள்விகள் வருவதும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நமது குரல்கள் அறைக்கூட்டம் தாண்டி பொது வெளியிலும் இனி ஒலிக்கவேண்டும்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

உற்சாகமாக மைக் பிடித்த பிரபல கவிஞரான ஆண்டாள் பிரியதர்ஷினியோ, ""நர்மதாவின் இந்த முயற்சி நம்பிக்கை தருகிறது. இதுவரை ஆண்களின் சொற்களுக்கு நாம் டப்பிங் போல் வாய் அசைத்துக்கொண்டிருந்தோம். இப்போதுதான் நாம் நமக்கான வார்த்தைகளை, நம் உள்ளங்கையில் ஏந்திவரத் தொடங்கியிருக்கிறோம். இது எனக்கான வார்த்தை, என் வாழ்வின் வார்த்தை என்று நாம் நம் சொற்களால் பேசத் தொடங்கியிருக்கிறோம். முதலில் பெண்கள் தங்கள் மாயையிலிருந்தும் பொய்மை யிலிருந்தும் விடுபட்டு வரவேண்டும்.

அண்மையில் ஒரு பெண்ணியப் போராளியாக மேடையில் வலம்வரும் ஒரு பெண்ணிடம், ஒரு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கேட்டேன்.

அவரோ, "நான் என் மாமியாரிடமும் என் கணவரிடமும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்' என்றார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளியில் பெண்ணியத்தையும் புரட்சி சிந்தனையையும் முழங்குகிற அந்தப் பெண், நிஜத்தில் எப்படி இருக்கிறார் என்பதைப் பார்த்து வேதனைப்பட்டேன். எனக்கு சிறகுகள் இருக்கிறது; சுதந்திரமாகப் பறக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே, கால்களில் பூட்டப்பட்ட விலங்கோடு வாழ்வது சரிதானா? எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றம் தருகிறது. அதனால் அதிலிருந்து பெண்கள் விடுபடவேண்டும். நம்மை அலங்கரித்துக் கொண்டு புருசன் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் சமையலுக்குப் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க் கிறோம். இதுதான் ஏமாற்றத்தைத் தருகிறது. இனி இது எதற்கு?

நம்மை நாமே இனி பாராட்டிக் கொள்வோம்.

ரோஜாச் செடி, யாருடைய பாராட்டுக்காக பூத்துத் தள்ளுகிறது? அது தனக்காகப் பூக்கிறது. அப்படி நாம் ஏன் மாறக் கூடாது? அமுதசுரபியான நாம் பிச்சை பாத்திரத்தை கையில் ஏந்தி நிற்கிறோம். இதைத் தூக்கி எறியுங்கள். நம்முடைய பலத்தை ஆண்களுக்குப் புரியவையுங்கள். நம் குருதியில் இருக்கும் நெருப்பை இனியேனும் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். இனியும் ஒரு ஆண் தேவதூதன் மேலே இருந்துஇறங்கி வந்து நம்மை மீட்பான் என்று கருதாதீர்கள். நம் வாழ்க்கையை நாம்தான் மீட்டெடுக்கவேண்டும். எவ்வளவு தாழ்த்தினாலும் நிமிர்ந்து தீப்பந்தம்போல் எரிவோம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்புக்கு பதில், உச்சம் ஞானம், திடம், உயிர்ப்பு என்று மாறுதல்களோடு வாழ்வோம்'' என்றார் அழுத்தம்திருத்தமாக.

பேராசிரியர் வெண்மணி, கவிஞர் விசயலட்சுமி ஆகியோரும் உரையாற்றினர்.

முன்பாதியில் உரையாற்றிய எல்லோரும் உணர்வுப்பூர்வமாக, எளிமையாக, சக பெண்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஆழமாக உரையாற்றினர்.

இறுதியாக.. அரசியலுக்கு வரும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப்பேச வந்த கவிஞர் நர்மதா, ""பெண்கள், தாய்மை, பெருங்கருணை, மன்னித்தல், போன்ற தங்களின் உன்னத குணங்களுடன் ஆணாக மாறிவிடாத அசல் பெண்களாக அரசியலுக்கு வரவேண்டும். இன்றிருக்கின்ற வெறுப்பு அரசியலுக்கு விடைகொடுத்து அனுப்பவேண்டிய பெரும் பொறுப்பும் பெண்ணுக்கானதே. ஆணும், பெண்ணும் இணைந்து ஒரு நல்ல சமூகம் உருவாக்கிட ஆணை நோக்கி பெண் பின் நடக்கத் தேவையில்லை. பெண்ணை நோக்கி ஆண் பயணிக்கவேண்டிய தூரம்தான் குறுக்கே நிற்கிறது'' என்று தெளிவான சிந்தனைகளை அள்ளித்தெளித்தார்.

பெண்ணியப் படைப்பாளர்களின் இந்த கலந்துரையாடலும் கருத்தரங் கமும் ஒரு பெரும் புத்தெழுச்சிக்கான அடையாளமாக அமைந்திருந்தது.